இன்றைய நடப்பு நிகழ்வுகள் (20.02.2019)

  • லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருதுகள்

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடைபெற்றது.

இதில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் (செர்பியா) சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். இந்த விருதை அவர் 4-வது முறையாக கைப்பற்றி உள்ளார். கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு களம் கண்ட ஜோகோவிச் விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். அத்துடன் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றினார். இது அவரது 15-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோனே பைல்ஸ் சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒலிம்பிக் போட்டியில் 4 தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 14 தங்கப்பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் பெற்றுள்ளார்.

2018-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தையும், கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்ற ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா திருப்புமுனை ஏற்படுத்திய வீராங்கனை விருதை தனதாக்கி இருக்கிறார். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுக்கான நல்லெண்ண விருதுக்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த யுவா என்ற தன்னார்வ அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு ஊரக பகுதியில் உள்ள கால்பந்து வீராங்கனைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளித்து அவர்களது திறமையை வளர்த்து வருகிறது. இந்த அமைப்பின் மூலம் 450 வீராங்கனைகள் கால்பந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களில் ஹேமா, நீதா, ராதா, கோனிகா ஆகியோர் விழாவில் நேரில் கலந்து கொண்டு இந்த விருதை பெற்றுக் கொண்டனர். இந்தியாவை சேர்ந்த ஒரு அமைப்புக்கு இந்த விருது கிடைப்பது இது 3-வது முறையாகும்.

மேலும் சில

  • சந்திரனுக்கு இதுவரை ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3-ந்தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. ‘பெரிஷீட்’ எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி வருகிற 22-ந்தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 22 ஆயிரத்துக்கும் அதிகமானவரகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஆபத்தான இடத்தில் சிக்கியிருந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 71 பேர் இந்திய அரசின் மீட்புப்படையினரால் காப்பாற்றப்பட்டனர். இதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரிய சேவை செய்ததற்காக ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் அந்நாட்டின் மிகவும் உயர்ந்த ‘கிரான்ட் கிராஸ்’ (Grand Cross of Order of Civil Merit) விருதை சுஷ்மா சுவராஜ் நேற்று ஏற்றுக் கொண்டார்.
  • டோகா (கத்தார்) நகரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னீஸ் போட்டியில் “எலிஸ் மெர்டென்ஸ்” (பெல்ஜியம்) சிமோனா ஹாலெப்-யை (ருமேனியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

  • ஏவுகணைகைளைத் தாங்கிச் செல்லும் – நீர்மூழ்கிக் கப்பலான “பதேஹ்” (பாரசீக மொழியில் – வெற்றிடம்) –ஐ ஈரான் உருவாக்கியுள்ளது. இந்த நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏவுகணை மூலம் சுமார் 2000 கி.மீ வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.
  • “டாக்டர் அனூப் சத்பதி” (Dr. Anoop Satapathy) தலைமையிலான குழு “தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் முறைகள்” குறித்த அறிக்கை சமர்பித்துள்ளது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு 375 அல்லது மாதத்திற்கு 9750 ரூபாய் என இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • ஐ.நா. அகதிகளுக்காக மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHCR) சார்பில் வழங்கப்படும் விருதான “மார்டின் என்னல்ஸ் மனித உரிமைகள் விருது – 2019” ஆனது “அப்துல் அஸிஸ் முகமது” (Abdul Aziz Muhamed) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • முலுகு மற்றும் நாராயண்பாத் என்ற இரு புதிய மாவட்டங்களை தெலுங்கானா வருவாய் துறை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33.
  • இந்திய விமானப் படையின் ஸ்பெக்ட்ரம் போர் திறனை நிரூபிக்கும் விதமாக, “வாயு சக்தி – 2019” (Vayu Shakti – 2019) என்ற பயிற்சியை போக்ரான்(ராஜஸ்தான்) மேற்கொண்டுள்ளது. இந்தப் பயிற்சியானது இந்திய விமானப் படை தலைவர் “பி.எஸ். தானோவின்” முன்னிலையில் நடைபெற்றது.

TNPSC Annual Planner - Click here

தினசரி நடப்பு நிகழ்வுகள் - Instant Updates - Click here to Download App

Download Current Affairs PDF - Click here