முழுநேர நுாலகம் அமைக்க இடம் ஒதுக்கி, ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், முடங்கி போன கோப்பு குறித்து, கல்வித் துறை கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிக்கரணை அடுத்து, பெரும்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. ராஜிவ் காந்தி சாலையில், ஐ.டி., நிறுவனங்களின் வரவால், பெரும்பாக்கத்தில், 10 ஆண்டுகளில், ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகின.இங்கு தற்போது, 1 லட்சத்திற்கு அதிகமானோர் வசித்து வருகின்றனர். பள்ளி, கல்லுாரி செல்வோரும், மூத்த குடிமக்களும் அதிகம் உள்ளனர்.அங்குள்ள கோகுல் நகரில், பகுதி நேர நுாலகம் இயங்கி வருகிறது. அங்கு, 2,000 நுால்கள் உள்ளன. பூங்காவில், சிறு அறையில் இயங்கி வரும் அந்த நுாலகத்திற்கு, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். எனவே, முழுநேர நுாலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது குறித்து, பெரும்பாக்கம் நலச்சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது: பெரும்பாக்கத்தில், முழுநேர நுாலகம் அமைக்க வேண்டும் என, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த, கிராமசபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, ஊராட்சி சார்பில், ஒன்றரை, 'கிரவுண்டு' இடம் ஒதுக்கப்பட்டது. மேலும், நுாலக கட்டடப் பணிக்காக, 35 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான கோப்பு கல்வித்துறையில் கிடப்பில் உள்ளது.இப்பகுதியில் சிறார்கள், மூத்த குடிமக்கள் அதிகம். அதை மனதில் வைத்து, பெரும்பாக்கத்தில் விரைவில் முழுநேர நுாலகம் அமைக்கும் திட்டத்திற்கு, கல்வித்துறை அதிகாரிகள், கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.