கல்லிலே கலைவண்ணம்

காவிரி பாயும் சோழவள நாடு. அது கலைகளின் விளைநிலம். வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம்.

இவ்வூரின் தென்புறம் அரிசிலாறு பாய்கிறது. இதன் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது.

இங்கேதான் ஐராவதீசுவரர் கோவில் உள்ளது.

இஃது ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.

நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோவில் நமக்குத் தருகிறது.

இவ்வளாகத்தில் எங்கும் சிற்பமயம். இக்கோவில் சிற்பங்கள் நம்மைச் சுண்டியிழுக்கும்.

கோயிலின் சிறப்புகள் :

முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்;

யானையைக் கொன்று அதன் தோலைத் தன்மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி போர்த்தவர் (கஜசம்ஹார மூர்த்தி) கதை இன்னொரு சிற்பம்;

அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம்.

இப்படிக் கதைபொதிந்த சிற்பங்கள் பல உள்ளன.

அன்னம் பாலிக்கும் அற்புத அன்னபூரணி, இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாக அமைந்த கண்ணப்பர், பறவை, விலங்கு, மனிதன் எனக் கலவையாய் அமைந்த ஓருடல் சிற்பங்கள் என, இக்கோவில் சிற்பங்கள் தமிழகச் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஒரு சோற்றுப்பதமாய் விளங்குகின்றன.

வானவியல் அறிஞர் - கார்ல் சேகன் கூற்று:

தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கார்ல் சேகன் என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் சில தகவல்கள்

அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசைஞானியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் முதலிய அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு எழுத்து தலைப்புகளுடன் கூடிய புடைப்பு சிற்பங்கள் கண்ணுக்கு பெருவிருந்தாக உள்ளன.

தஞ்சை அரண்மனைக்கு சொந்தமானது இக்கோயில். அழகு வாய்ந்த இதன் பழமையை தற்போது மத்திய தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இதனை மரபு அடையாள சின்னமாக யுனெசுகோ (UNESCO) அமைப்பு அறிவித்துள்ளது. ஒற்றைவரியில் இதனை கலைகளின் புகலிடம் எனலாம்.